தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், கார் உள்ளிட்ட வாகன சரக்கு போக்குவரத்தில் இந்திய ரயில்வேயின் பங்கை அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சரக்கு முனையம் (Goods Shed) 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த முனையும் கடந்த 5 ஆண்டுகளில் மோட்டார் வாகனத் துறைக்கு ஒரு முக்கியமான சரக்கு மையமாக உருவெடுத்துள்ளது. சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில், முக்கிய மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள சரக்கு முனையம், கார்கள் மற்றும் வணிக வாகனங்களை ரயில் மூலம் விரைவாகக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதிலும் 2025-26 நிதியாண்டில் இந்த முனையம் வாகனங்களை ரயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதில் புதிய சாதனையை படைத்துள்ளது. டெய்ம்லர் நிறுவனத்தின் 494 பாரத் பென்ஸ் லாரிகள், ஹூண்டாய் நிறுவனத்தின் 24,708 கார்கள், டொயோட்டோ நிறுவனத்தின் 202 கார்கள் ஆகியவை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இவற்றில் லாரிகள் கையாண்டதால் ரூ.1.88 கோடியும், கார்கள் கொண்டுச் சென்றதால் ரூ.39.74 கோடியும் என 2025-26 நிதியாண்டில் ரூ.41.62 கோடியும் ரயில்வேக்கு வருவாய் கிடைத்தது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் 384 பாரத் பென்ஸ் லாரிகளை கையாண்டுள்ளது. இதன்மூலம் ரூ.1.51 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது 2025-26 நிதியாண்டின் முதல் 6 மாதங்களை ஒப்பிடுகையில் 80.3 சதவீதம் அதிக லாரிகள் கையாளப்பட்டுள்ளன.